சேவைகள்

மாலை போடுதல் மற்றும் இருமுடி கட்டுதல்

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் தவறாமல் 41 நாட்கள் முறையாக விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது. அத்தகைய அன்பர்களுக்கு மட்டுமே மாலை போடுவதற்கும் இருமுடி கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கடைப்பிடிக்க வேணடிய விரதநெறிமுறைகள் பற்றிய விவரங்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.

 

வித்யாரம்பம்

ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று சிறுகுழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

பாலர் பள்ளி

பாலர் பள்ளி 2007 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுகிறது. சின்னஞ்சிறுக் குழந்தைகளுக்கு அவர்கள் இசைக்கக்கூடிய அளவிற்கு தேவாரம், திருவாசகம், விநாயகர் அகவல், பகவத் கீதை, ஸ்லோகங்கள் போன்றவற்றை சொல்லித் தரவும், அவர்களை நெறிப்படுத்தும் நோக்கில் நீதிக்கதைகள், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை சொல்லித்தரவும், எளிய உடற்பயிற்சி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாலர் பள்ளி வகுப்புகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.30 மணிவரை நடைபெறுகின்றன. வகுப்புகளின் நிறைவில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு பிரசாதம், பால் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த பள்ளியில் சுமார் 200 குழந்தைகள் படிக்கின்றனர்.

 

மாதா பிதா பாத பூஜை

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி நாளில் பாலர் பள்ளி மாணவர்கள் தங்கள் அம்மா அப்பாவிற்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி வழக்கத்தில் உள்ளது.

 

தேவாரம் – திருவாசகம் வகுப்புகள்

தேவாரம் – திருவாசகம் வகுப்புகள் 2000 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகின்றன. இந்த இலவச இசைப்பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமைதோறும் இரவு 7.00 மணிமுதல் 8.00 மணி வரை நடைபெறுகின்றன. ஓதுவார் அவர்களால் நடத்தப்படும் இந்த பயிற்சியில் அன்பர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்து கொள்கிறார்கள்.

 

யோகா வகுப்புகள்

1996 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் இந்த வகுப்புகள் வருடத்திற்கு இரண்டு முறை (ஜனவரி-ஜுன் மற்றும் ஜூலை-டிசம்பர்) ஆடவர், பெண்களுக்கு என தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. இவ்வகுப்புகள் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் காலையில் நடத்தப்படுகின்றன.

 

இரத்த தானம்

இரத்த தானம் 1996 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் இரத்ததான முகாம் சங்க வளாகத்தில் நடைபெற்று வருகிறது. பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் இரத்த தானத்தில் பங்கு பெறுகின்றனர். இச்செயல் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பல விருதுகளைப் பெற்றதோடு பத்திரிக்கை வாயிலாகவும் பாராட்டு பெற்றுள்ளது. கார்த்திகை, மார்கழி மண்டல பூஜை சமயங்களில், மாலையிட்ட அன்பர்கள் நிறைய அளவில் இரத்த தானம் செய்வது ஒரு விசேஷ நிகழ்வாகும்.

இது தவிர கண் தானம், உடல் தானம், உறுப்பு தானம் செய்ய அன்பர்கள் ஊக்குவிக்கப் படுகின்றனர். இதற்கென தனித்தனியே உறுதிமொழிப் பத்திரங்கள் புத்தக நிலையம் மூலம் வழங்கப்படுகின்றன.

 

அன்னதானம் மற்றும் நீர்மோர் தானம்

பிரதி மாதம் உத்திர நட்சத்திர தினத்தன்றும், வாரத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கோயிலுக்கு வரும் சுமார் 2000 அன்பர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்படுகிறது. மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோருக்காக நடத்தப்படும் அமைப்பினருக்கு மாதந்தோறும் அரிசியும், உணவும் வழங்கப்பட்டு வருகின்றன.

கார்த்திகை மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர தினத்தன்று மகா அன்னதானம் நடைபெறுகிறது. இதில் சுமார் 16,000 அன்பர்கள் பங்கு கொள்கின்றனர்.

பிரதி ஆங்கில வருடப்பிறப்பு மற்றும் தமிழ் வருடப் பிறப்பன்றும் கோயிலுக்கு வரும் அன்பர்கள் அனைவருக்கும் லட்டுப் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

நீர்மோர் தானம் 1991 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை வெயிலில் தவிக்கும் மக்களின் தாகத்தினைத் தணிக்கும் வகையில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.6.000 செலவில் நீர்மோர் தானம் வழங்கப்பட்டு வருகிறது.

கல்வி தானம்

கல்வி தானம் 1994 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுகின்ற ஏழை எளிய மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பதற்கு உதவும் வகையில் கல்வி உதவித் திட்டம் செம்மையாகச் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்காக அன்பர்கள் வழங்கும் உதவியானது நிரந்தர வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் தொகை மாணவர்களின் கல்வி உதவித் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த காலங்களில் கல்வி உதவி பெற்ற மாணாக்கர்கள் நன்கு படித்து வேலைக்குச் சென்ற பிறகு, நன்றி மறவாமல் மற்ற ஏழை மாணவர்களின் படிப்பிற்காக உதவி செய்யும் பெருந்தன்மை நெகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது.

 

புத்தக நிலையம்

பள்ளி மாணவர்களும் இளைஞர்களும் பயன்பெறும் வகையில், அவர்களை ஊக்குவிக்கும் சொற்றொடர்களும், ஆன்றோர்களின் சிந்தனைகளும் சுருக்கமாகத் தரப்பட்ட சிறு பிரசுரங்களும் (Posters) குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் காணப்படும் வாசகங்கள் அடங்கிய புத்தகமும் குறுந்தகடுகளும் இதே போல் பல பிரசுரங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் ஆன்மிகம் தொடர்பான பல புத்தகங்களும் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

 

மூலிகை வனம்

இங்கே நூற்றுக்கணக்கான துளசிச்செடிகளும், பலவகை மூலிகைச் செடிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் நவக்கிரஹங்கள், 12 ராசிகள், 27 நட்சத்திரங்களுக்குரிய மரக்கன்றுகள், இறைவன் சாந்நித்தியத்திற்குரிய பத்து விருட்சங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விருட்சங்களைத் தரிசித்து வலம் வந்து நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் இன்றைய தேதியில் மொத்தம் 368 மரங்களும், 356 வகை மூலிகைச் செடிகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

 

உழவாரப்பணி

உழவாரப்பணி டிசம்பர் 2012 முதல் செயல்பட்டு வருகிறது. பிரதி மாதம் ஞாயிற்றுகிழமைகளில் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்று வரும் உழவாரப் பணியில், அன்பர்கள் ஒவ்வொரு வாரமும் பெருமளவில் கலந்து கொண்டு கோயில் வளாகத்தைச் சுத்தம் செய்கிறார்கள். கோயிலின் வளர்ச்சிக்குத் தன்னலம் கருதாமல் தொண்டு செய்கின்ற சேவையாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். தன்னலம் கருதா பொதுச்சேவையில் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் ஒரு தொடர் பயிற்சிக்களமாகவும் இந்தக் கோயில் வளாகம் பயன்படுகிறது.

 

சங்கத்தின் இதர சேவைகள்

 • துளசித்தீர்த்தம்
  ஆலயத்திற்கு வரும் அன்பர்கள் பருகுவதற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் துளசி சேர்க்கப்பட்டு செப்புப் பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது.
 • இலவச மிதியடி மையம்
  மிதியடி பாதுகாப்பு வசதி அன்பர்களுக்காக இலவசமாக செயல்பட்டு வருகிறது. இம்மையம் சேவையாளர்களால் பெரிதும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
 • சாலை பராமரிப்பு
  சங்க வளாகத்தை ஒட்டியுள்ள லாசன்ஸ் சாலை தினந்தோறும் சுத்தம் செய்யப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
 • வாரம் ஒரு நீதிக்கதை
  வாழ்க்கையில் வெற்றி பெற எல்லோரும் பின்பற்ற வேண்டிய நெறி முறைகள் பற்றியும், பலருக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பு முனைச் சம்பவங்கள் பற்றியும் வாரந்தோறும் கதையாக அல்லது கட்டுரையாக கரும்பலகையில் எழுதப்படுகிறது. எல்லா வயதினரும் இதனை ஆர்வத்தோடு படித்துப் பயன்பெறுகின்றனர்.
 • ஆன்மிகத் தகவல்கள்
  பிற கோயில்கள் பற்றி அரிய ஆன்மிகத் தகவலகள் அன்பர்கள் பயன்பெறும் வகையில் கரும்பலகையில் வாரந்தோறும் எழுதப்படுகிறது.
 • ஆன்மிக யாத்திரை
  இலாப நோக்கில்லாமல் அன்பர்கள் வசதியை மட்டும் கருத்தில் கொண்டு, கடந்த 15 ஆண்டுகளாக காசி யாத்திரை, நட்சத்திரக் கோயில்கள் தரிசனம், திவ்ய தேச யாத்திரை, தேவாரத் திருத்தலங்கள் யாத்திரை போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.
 • குளிக்கும் வசதி
  மண்டல பூஜை காலத்தில் (கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து மார்கழி மாதம் 27ந் தேதி வரை) மாலை அணிந்து விரதம் இருக்கும் வெளியூர் அன்பர்கள் வசதிக்காக இலவசமாக குளிக்கும் வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளன.
 • ஹிந்தி வகுப்புகள்
  குழந்தைகள் சிறுவயதிலே ஹிந்தி கற்றுக்கொள்ளும் பொருட்டு ஹிந்தி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் பிராத்தமிக் தேர்வுகளில் பங்கேற்கின்றனர்.
 • கோடைகால வகுப்புகள்
  ஏப்ரல், மே மாத விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கெனத் தனியாக யோகா வகுப்புகள் நடத்தப்படுகின்றன.