ஸ்ரீ ஐயப்பன் கோவிலின் பொதுவான பூஜை நேரங்கள்
காலை | மாலை |
05.00 நடை திறத்தல் | 05.00 நடை திறத்தல் |
05.30 கணபதி ஹோமம் | 06.30 மாலை பூஜை தீபாராதனை |
06.30 அபிஷேகம் | 07.40 இரவு பூஜை சீவேலி |
07.30 உஷத்பூஜை, சீவேலி | 08.40 ஹரிவராஸனம் |
10.30 உச்ச பூஜை 11.00 நடை சாத்துதல் | 08.45 நடை சாத்துதல்* |
* குறிப்பு: கார்த்திகை மண்டல பூஜை சமயத்தில் இரவு 9.40 மணிக்கு நடை சாத்தப்படுகின்றது.
பொதுவான பூஜை வழிபாடு
கீழ்க்கண்ட பூஜைகள் தினமும் நடைபெறுகின்றன.
- கணபதி ஹோமம்
- அபிஷேகம்
- சகஸ்ரநாம அர்ச்சனை
- கோமாதா பூஜை
- நவக்கிரஹ ஹோமம் (அபிஷேகம் – சனிக்கிழமை)
கீழ்க்கண்ட பூஜைகள் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் நடைபெறுகின்றன.
- ராகுகால பூஜை (வெள்ளிக்கிழமை மட்டும்)
- பகவதி பூஜை (வெள்ளிக்கிழமை மட்டும்)
- நீராஞ்சனம் (சனிக்கிழமை மட்டும்)
சிறப்பு பூஜைகள்
நாகராஜா பூஜை
ஒவ்வொரு ஆயில்ய நட்சத்திர தினத்தில் காலை 8.15 மணியளவில் இந்தப் பூஜை நடைபெறுகின்றது. வயது மிக அதிகமாகியும், திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்காகவும், திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களின் குறையைப் போக்குவதற்கும், மேலும் ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளவர்களுக்காகவும் இந்த பூஜை நடைபெறுகிறது. இதில் அன்பர்கள் பலர் பங்கு பெற்று இறையருளால் குறைகள் நீங்கப் பெறுகிறார்கள்.
மஹாலட்சுமி பூஜை
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இரவு 7.00 மணியளவில் இந்தப் பூஜை நடைபெறுகிறது. குடும்பத்தில் சௌபாக்கியம் கிடைப்பதற்காகவும், நாட்டின் சுபிட்சத்திற்காகவும் நடத்தப்படும் இந்தப் பூஜையில் நூற்றுக்கணக்கான அன்பர்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்.
நட்சத்திர அர்ச்சனை, நவக்கிரஹ அர்ச்சனை
அன்பர்கள் விரும்பும் நட்சத்திர தினத்தில் பகவான் ஸ்ரீ ஐயப்பனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு பிரசாதத்தை அவ்வப்போது தபால் மூலம் (உள்நாடு + வெளிநாடு) அனுப்பும் ஏற்பாடு நடைமுறையில் உள்ளது. இதேபோல் நவக்கிரஹங்களுக்கு 9 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்து பிரசாதங்களை அவ்வப்போது தபாலில் அனுப்பும் வழக்கமும் உள்ளது.
முழுநாள் பூஜை
அன்பர்கள் விரும்பும் ஆங்கிலத் தேதியில் (தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நீங்கலாக) முழுநாள் பூஜை அவர்கள் பெயரில் செய்யப்பட்டு பிரசாதம் வழங்குவதற்கு உரிய ஏற்பாடு நடைமுறையில் உள்ளது. அம்மா, அப்பாவின் நினைவாக பல அன்பர்கள் இப்பூஜையில் பங்கு பெறுகின்றனர்.
ரத பவனி, பல்லக்கு பவனி மற்றும் புஷ்பாபிஷேகம்
ஒவ்வொரு உத்திர நட்சத்திரத்தன்றும், அன்பர்கள் உபயம் ஏற்றுக்கொள்ளும் நாட்களிலும் பகவான் ஸ்ரீ ஐயப்பனின் ரதபவனி நடைபெறுகின்றது. நான்கு பேர் தூக்கும் பல்லக்குப் பவனியும் நடைபெறுகின்றது. மேலும் அன்பர்கள் விரும்பும் தினங்களில் புஷ்பாபிஷேகம் செய்யும் ஏற்பாடும் நடைமுறையில் உள்ளது.
பிரம்மோத்ஸவம்
பகவான் ஸ்ரீ ஐயப்பனுக்கு பிரம்மோத்ஸவ பூஜை வழிபாடுகள் மண்டல பூஜையின் போது 6 நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. கார்த்திகை மாத உத்திர நட்சத்திர தினத்தன்று சுமார் 16,000 அன்பர்கள் பங்கு பெறும் மகா அன்னதானம் நடைபெறுகின்றது. அன்று மாலை கொடியேற்றப்பட்டு பிரம்மோத்ஸவ விழா துவங்குகின்றது. 5-ஆம் நாள் இரவு பள்ளி வேட்டையும், நிறைவு நாளன்று காவிரியில் ஆராட்டும், பிறகு கொடியிறக்கமும் முறையாக நடைபெறுகின்றன. பிரம்மோத்ஸவ பூஜையின் போது வலம்புரிச் சங்காபிஷேகம் கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுகின்றது. இப்பூஜைகள் அனைத்தும் சபரிமலை தந்திரி கண்டரு மஹேஸ்வரரு, அவரது குமாரர் தந்திரி கண்டரு மோகனரு அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெறுகின்றன. மண்டல பூஜை நாட்களில் இதிகாசங்கள், புராணங்கள் பற்றி உபந்நியாசங்கள், சொற்பொழிவுகள், கதாகாலட்ஷேபங்கள் போன்றவை நடத்தப்படுகின்றன.